Friday, 26 August 2022

மொழி முதல், இறுதி எழுத்துக்கள்

மொழி முதல், இறுதி எழுத்துக்கள்



       மொழிகள்  அனைத்தும் எழுத்தொலிகளால் ஆனவை. அவை நாம் ஒலிப்பதற்கு இனிமையாகவும், எளிமையாகவும் இருக்கவேண்டும். இதற்குச் சொற்களின் முதலிலும், இறுதியிலும் ஒலிக்கும் எழுத்தொலிகளே காரணாமாக அமைகின்றன. 
     இங்கே மொழி என்பது சொல் என்ற மற்றொரு பெயரைக் கொண்டுள்ளது. இந்த சொல்லானது எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று சந்திக்கின்ற அல்லது சேர்கின்ற அல்லது இணைகின்ற சொற்புணர்ச்சியின் அடிப்படையில் இயங்குகின்றன. அவை சந்திக்கும் போது அல்லது சேரும் போது  முதல் சொல்லின் கடைசி எழுதும் இரண்டாம் சொல்லின் முதல் எழுத்துமே சேர்கின்றன, சந்திக்கின்றன. 
        இவற்றை வைத்தே மொழி முதல் எழுத்தும், இறுதி எழுத்துகளையும் நாம் கணக்கிடுகின்றோம். மொழிக்கு முதலில் அதாவது சொல்லுக்கு முதலில் எந்தெந்த எழுத்தக்கள் வரும், எந்தெந்த எழுத்துக்கள் இறுதியாக வரும் என்பன குறித்த பதிவே இது. 

மொழி முதல் எழுத்துக்கள்:- 

         மொழி முதல் எழுத்துக்கள் அதாவது இங்கே மொழி என்பது ஒரு சொல்லையே குறிக்கின்றது அதனால் இதனை சொல் முதல் எழுத்து என்றே மனதில் நிறுத்த வேண்டும். மொழிக்கு அதாவது சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துக்கள்  மொழி முதல் எழுத்துக்கள்  எனப்படும்.

         12 உயிரெழுத்துகளும்,  10 மெய் எழுத்துகளும் (உயிருடன் கூடி) மொழிக்கு முதலில் வரும். எனவே மொழி முதல் எழுத்துகள் மொத்தம் 22

உயிர் -  தனியாக - இனைந்து :- 
    
            12 உயிரெழுத்துகளும் தனியாகவும், மெய்யுடன் இணைந்தும் மொழிக்கு முதலில் வரும். 

சான்று :-
    
    அம்மா, ஆர்வம், இன்பம், ஈகை, உதவி, ஊக்கம், எழில், ஈறு, ஐயம், ஒளி, ஓவியம்,  ஔவை

மெய் உயிருடன் கூடி :- 

        க்ச்,  த்ந், ப்ம், வ்ய், ஞ்ங் என்ற 10 மெய்யெழுத்துக்களும் 12 உயிரெழுத்துகளோடு கூடி உயிர்மெய்யாக மொழிக்கு முதலில் வரும். 
        இவற்றுள் க்ச்,  த்ந், ப்ம் என்ற 6 மெய்கள் மட்டும் எல்லா உயிரெழுத்துகளுடனும் கூடி மொழிக்கு முதலில் வரும்.  மேலே கூறிய வ்ய், ஞ்ங் ஆகியவை மட்டும் சில எழுத்துகளுடன் மட்டுமே கூடி மொழிக்கு முதலில் வரும். அவற்றுள் 

வ் :-

    வ் என்னும் மெய்யெழுத்து அஆ, இஈ, எஏ, ஐ, ஔ  எனும் 8 உயிர்களுடன் கூடி மொழிக்கு முதலில் வரும். 

ய் :-

    ய் என்னும் மெய்யெழுத்து அஆ, உஊ, ஒஔ எனும் 6 உயிர்களுடன் கூடி மொழிக்கு முதலில் வரும். 

ஞ் :-

        ஞ் என்னும் மெய்யெழுத்து அஆ, எஒ என்ற 4 உயிர்களுடன் கூடி மொழிக்கு முதலில் வரும்.

ங் :-

        ங் என்னும் மெய்யெழுத்து  'அ'கரத்துடன் கூடி மொழிக்கு முதலில் வரும் 

சான்றுகள் :- 
 
க் ங் த் ந் ப் ம் வ் ய் ஞ் ங்
கருணை சங்கு தந்தம் நட்பு பதவி மதிப்பு வரம் யவனர் ஞமலி
(நாய்)
ஙனம்
(அங்ஙனம்-இடம்)
காலம் சாபம் தானம் நாள் பாடம் மானம் வாரம் யாழ் ஞாலம் -
கிளி சிற்றுந்து திறை நிலை பிழை மிருகம் விருப்பம் - - -
கீற்று சீற்றம் தீர்வு நீட்சி பீடு மீன் வீடு - - -
குடும்பம் சுத்தம் துன்பம் நுணுக்கம் புகழ் முயற்சி - யுகம் - -
கூலி சூழ்ச்சி தூய்மை நூல் பூட்டு மூப்பு - யூகம் - -
கெண்டி செடி தெளிவு நெறி பெருமை மென்மை வெற்றி - ஞெகிழி(கொள்ளிக்கட்டை) -
கேண்மை சேறு தேர்வு நேர்மை பேராண்மை மேன்மை வேள்வி - - -
கை சைகை தை நைதல்(இளைத்தல்) பை மை வை - - -
கொடி சொற்பம் தொழில் நொடி பொலிவு பொட்டு ஞொள்கல்(சுருங்குதல்)
கோபம் சோகம் தோல்வி நோய் போட்டி மோகம் - யோகம் - -
கௌவுதல் சௌந்தர்யம் தௌவை(மூதேவி) நௌவி(மான்) பௌவம்(கடல்) மௌனம் வௌவுதல் யௌவனம்(அழகு) - -
- - - - - அஆ, இஈ,எஏ, ஐஔ அஆ,உஊ, ஓஔ அஆ, எஒ

மொழி இறுதி எழுத்துக்கள் :-
    
        மொழிக்கு அதாவது சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகள் மொழி இறுதி எழுத்துகள் எனப்படும். 

அவை :- 

                உயிர்                      -    12
                மெய்                       -    11
                குற்றியலுகரம்  -      1
                                                    --------
                                                        24
                                                    --------                         
மொழி இறுதி எழுத்துகள் மொத்தம் 24 

உயிரெழுத்து :-

        உயிரெழுத்துகள் 12ம் தனியாகவும், மெய்யெழுத்துகளுடனும் இணைந்தும் மொழிக்கு இறுதியில் வரும்.

(I) தனியாக :-

(i) நெடில் ;- 
    
        ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய 7 உயிர் நெடில் எழுத்துகளும் ஒரேழுத்து ஒருமொழியாக மட்டுமே மொழிக்கு இறுதியில் வரும். 

சான்று :- 

            ஆ -  பசு
            ஈ   -  சிறிய பறவை (House Fly)
            ஊ - ஊன் (இறைச்சி,தசை)
            ஏ   - உயர்வு, பெருமை
            ஐ   - அழகு, பெற்றோர், வியப்புக்குறி
            ஓ   - ஐயம், ஞாபகம், ஒழிவு 
            ஔ - நிலம் அழைத்தல், அனந்தன் எனும் பாம்பு   

(ii) குறில் :-

        அ, இ, உ, எ, ஒ எனும் 5 உயிர்க்குறில் எழுத்துகளும் அளபெடையாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும். 

1. பலாஅ
2. தீஇ
3. பூஉ
4. சேஎ ( சிவப்பு, காளை, வெறுப்புக்குறி
5. கோஒ ( அரசன்) 

(II) மெய்யுடன் :- 

         'எ'கரம் தவிர பிற உயிர்கள் மெய்யுடன் கூடி மொழிக்கு இறுதியில் வரும்.

1. பல (அ)
2. பலா (ஆ)
3. கிளி (இ)
4. தீ (ஈ)
5. சுடு (உ)
6. பூ (ஊ)
7. நொ (ஒ)
8. கோ (ஓ)
9. அவனே (ஏ)
10. தை (ஐ)
11. கௌ (ஔ)

மெய்யெழுத்து :-

         மெய்யெழுத்துகளுள் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய 11 எழுத்துகளும் மொழிக்கு இறுதியில் வரும்.

சான்று :- 

        மண், மரம், மான், நாய், யார், பல், யாழ், நாள், உரிஞ் (தேய்த்தல், உராய்தல், பூசுதல்), பொருந் (பொருந்துதல்), தெவ் (பகைவர்).

குற்றியலுகரம் :- 

        கு, சு, டு, து, பு, று எனும் 6 எழுத்துகளை ஈறாக கொண்ட குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வரும். 

சான்று:-
        
       ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, 

ஆகவே இவையே மொழி முதல், இறுதி எழுத்துகளாக உள்ளன. 

இந்த பதிவினை குறித்த உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.  இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிருங்கள். 

                                                                நன்றி



இங்ஙனம்:-

அ. அசார்தீன் (எம்,ஏ., எம். பில்.,) 
தமிழ்த்துறை உயராய்வு மையம்,
பழனி - 624601

Tuesday, 9 August 2022

யாப்பு செய்யுள் உறுப்பு தளை

 தளை

        இந்த யாப்பிலக்கணமானது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா போன்ற உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. அவற்றுள் எழுத்து, அசை, சீர் போன்ற மூன்றையும் அனைவருக்கும் புரியும் வண்ணம் முந்தைய பதிவுகளை பதிவு செய்துள்ளேன். இந்த பதிவில் யாப்பின் அடுத்த உறுப்பான தளை பற்றி காண்போம்.


தளை

        தளை எனும் உறுப்பை தொடங்கும் முன் இலக்கண விளக்கம் கொடுக்கும் மேற்கோளை காண்போம். தளை குறித்து இலக்கண நூலான இலக்கண விளக்கம் கூறும் போது சீரொடு சீர் தளைப்பெய்வது தளை என்று கூறும். தளை என்பதற்கு கட்டுதல் என்று பெயர். தளைதல் என்ற சொல்லில் உருவானது இத்தளை.

        சீர்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் போது நின்ற சீரின் ஈற்றசையும், வரும்சீரின் முதலசையும் ஒன்றுவதும், ஒன்றாததும் தளை ஆகிறது. இதை வடநூலார் பந்தம் என்பர்.


தளை விளக்கம் :-

        தளை என்னும் சொல்லுக்கு கட்டுதல் அல்லது பொருத்துவது என்பது பொருளாகும். கட்டுதளை தளைத்தல் என்றும் கூறுவர். "சீர்கள் ஒன்றை ஒன்று தொடரும் முறைக்கு" யாப்பு நூலார் தளை எனப் பெயரிட்டனர். இசை தொடர்ச்சி தோன்ற அமைக்கப்படுவதே  தளையின் பயனாகும்.  "நின்ற சீரின் ஈற்றசையும், வரும் சீரின் முதலசையும் ஒன்றியோ, ஒன்றாமலோ அமையுமானால் அது தளை என்று வழங்கப்படுகிறது. 


தளை கண்டறிவது எப்படி :- 

  தளை கண்டுபிடிப்பதற்கு முக்கியமான விஷயங்கள் சில உள்ளன. அவை

1.   சரியாக அசை பிரிக்க தெரிந்திருக்க வேண்டு்ம். 

2. பிரித்த அசைக்கான சரியான வாய்பாடு தெரிந்திருக்க வேண்டும். 

3. நின்ற சீர், வரும் சீர் என்பதை பற்றிய தெளிவு இருக்க வேண்டும். 

இந்த மூன்றும் சரியாக புரிந்தாலே போதும் தளையை கண்டறிவது சுலபமாக அமையும். 


சரி அது என்ன நின்ற சீர், வரும் சீர்? 

நின்ற சீர், வரும் சீர்  அப்படி என்றால் என்ன என்றால் உங்களுக்கு ஈசியா புரிஞ்சுக்க ஒரே வழி இது தான் ஒரு கூட்டல் குறி போடுங்க இந்த கூட்டல் குறிக்கு இடது பக்கம் இருப்பது நின்ற சீர், வலது பக்கம் இருப்பது வரும் சீர் புரிஞ்சது. புணர்ச்சி விதி மாதிரி தான் உதாரணமா கீழ இருக்க குறளை பாருங்களேன். 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது. 

இந்த குறளில முதல் இரண்டு சீரை எடுப்போம் அன்பும் அறனும் இத நான் சொன்னது மாதிரி கூட்டல் குறி வச்சு பாருங்க அன்பும் + அறனும் இதிலே கூட்டல் குறிக்க முன்னாடி இருக்க அன்பும் என்பது நின்ற சீர். கூட்டல் குறிக்கு பின்னாடி இருக்க அறனும் என்ற சொல் வரும் சீர் சரியா. எப்போதும் நிலையாக இருப்பது நின்ற சீர் அதை வந்து அடையும் சீர் வரும் சீர். இதை மனதில் தெளிவா பதிய வைங்க சரியா. சரி வாங்க தளைய பத்தி பாப்போம். 

இத்தளையானது இரண்டு வகைகளை கொண்டது 

1. ஒன்றிய தளைகள் (4)

2.  ஒன்றாத தளைகள் (3)


ஒன்றிய தளை விளக்கம் :

   நின்ற சீரின் ஈற்றசையும், வரும் சீரின் முதலசையும் ஒன்றாக அமைவது ஒன்றிய தளையாகும். ஒன்றிய தளைகள் 4 வகையாகும் அவை,

1. நேர் ஒன்றிய ஆசிரிய தளை

2. நிரை ஒன்றிய ஆசிரிய தளை

3. வெண்சீர் வெண்டளை

4. ஒன்றிய வஞ்சித்தளை 






நேர் ஒன்றிய ஆசிரியத் தளை :- 

        நின்ற சீரின் ஈற்றசையில்  தேமா,புளிமா ஆகிய   மாச்சீர்கள் வந்தும் , வரும் சீரின் முதலசையில்  நேரசை வருமானால் அது  நேர் ஒன்றிய ஆசிரியத் தளை என அழைக்கப்படும். இதனை மா முன் நேர்  என்று கூறுவர். 

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 


நிரை ஒன்றிய ஆசிரியத் தளை :- 

     நின்ற சீரின் ஈற்றசையில் கூவிளம், கருவிளம்  ஆகிய  விளச்சீர்கள் வந்தும், வரும் சீரின் முதலசையில்  நிரையசை  வருமானால் அது நிரை ஒன்றிய ஆசிரியத் தளை என அழைக்கப்படும்இதனை விளம் முன் நிரை என்று கூறுவர். 

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 

வெண்சீர் வெண்டளை :- 

        நின்ற சீரின் ஈற்றசையில்  தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் போன்ற  காய்ச்சீர்கள் வந்தும், வரும் சீரின் முதலசையில்  நேரசை வருமானால் அது  வெண்சீர் வெண்டளை என அழைக்கப்படும். . இதனை காய் முன் நேர் என்று கூறுவர்.

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 


ஒன்றிய வஞ்சித்தளை :- 

        நின்ற சீரின் ஈற்றசையில்  தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகிய  கனிச்சீர்கள் வந்தும், வரும் சீரின் முதலசையில்  நிரையசை வருமானால் அது  ஒன்றிய வஞ்சித்தளை என அழைக்கப்படும். இதனை கனி முன் நிரை என்று கூறுவர்.

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 


ஒன்றாத தளைகள் :- (3)

        நின்ற சீரின் ஈற்றசையும், வரும் சீரின் முதலசையும் ஒன்றாமல் அமைவது ஒன்றாத தளையாகும். ஒன்றாத தளைகள் 3 வகையாகும் அவை,

1. இயற்சீர் வெண்டளை

2. கலித்தளை

3. ஒன்றாத வஞ்சித்தளை




இயற்சீர் வெண்டளை :- (2)

        இயற்சீர் வெண்டளை மட்டும் இரண்டு விதமாக தளைக் கொள்ளும் அவற்றுள்,

    1. மா முன் நிரை 

    2. விளம் முன் நேர் 

1. மா முன் நேர் :- 

        மா முன் நிரை என்பது நின்ற சீரின் ஈற்றசையில் தேமா, புளிமா ஆகிய "மாச்சீரைப்" வந்தும் , வரும் சீரின் முதலசையில் "நிரையசை" வந்தும் 

2. விளம் முன் நேர் :-

        நின்ற சீரின் ஈற்றசையில் கூவிளம், கருவிளம்  ஆகிய "விளச்சீர்" வந்தும் , வரும் சீரின் முதலசையில் "நேரசை" பெற்றும் வந்தாலும்  அது இயற்சீர் வெண்டளை.

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 

கலித்தளை :-

        நின்ற சீரின் ஈற்றசையில்  தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் போன்ற  காய்ச்சீர்கள் வந்தும்வரும் சீரின் முதலசையில்  நிரையசை  வருமானால் அது  கலித்தளை என அழைக்கப்படும். . இதனை காய் முன் நிரை  என்று கூறுவர். 

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 

ஒன்றாத வஞ்சித்தளை :-

                    நின்ற சீரின் ஈற்றசையில்  தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகிய  கனிச்சீர்கள் வந்தும், வரும் சீரின் முதலசையில்  நேரசை வருமானால் அது  ஒன்றாத வஞ்சித்தளை என அழைக்கப்படும். இதனை கனி முன் நேர் என்று கூறுவர்.

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 

நான்கு பாக்களுக்கான தளைகள் :-

வெண்பா :- 

            1. இயற்சீர் வெண்டளை,  2. வெண்சீர் வெண்டளை 

ஆசிரியப்பா :- 

            1. நேர் ஒன்றிய ஆசிரியத்தளை, 2. நிரை ஒன்றிய ஆசிரியத்தளை

கலிப்பா :-

            கலித்தளை 

வஞ்சிப்பா :- 

            1. ஒன்றிய வஞ்சித்தளை, 2. ஒன்றாத வஞ்சித்தளை 

        இவை தான் தளை குறித்த சிறப்பான விளக்கமாக அமைகிறது. இதை குறித்த உங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.  

       இந்த பகுதிக்கான உதாரணங்கள் குறித்த  PDF FILE ஐ கீழே பதிவுசெய்துள்ளேன் அதனை தரவிறக்கம் DOWNLOAD செய்து கொள்ளுங்கள். 

            ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் asardeen311@gmail.com என்ற  என்னுடைய மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். 

PDF DOWNLOAD HERE 📥

PDF FILE

நன்றி 

Friday, 5 August 2022

யாப்பு : செய்யுள் உறுப்பு சீர் பகுதி 3

 யாப்பு செய்யுள் உறுப்பு சீர்

 நாலசைச்சீர்

முந்தைய பதிவுகளில் கூறியது போன்று யாப்பிலக்கணம் என்பது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. அவற்றுள் எழுத்து மற்றும் அசை ஆகிய இரண்டு உறுப்புகளையும் முழுவதும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக சீர் என்ற உறுப்பை கண்டுகொண்டிருக்கிறோம். அவற்றுள் ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர் ஆகிய மூன்று சீர்களையும் முந்தைய இரண்டு பகுதிகளில் பதிவு செய்துள்ளேன் அதை படித்து விட்டு நாலசை சீரை படிக்கவும். பகுதி 1 2 ற்கான Link கீழே உள்ளது. அதை படித்து விட்டு இந்த படிவை படிப்பது சிறப்பாக அமையும்.

நாலசைச்சீர்

நாலசைச்சீர் இது பொதுச்சீர் என பெயர் பெறும். இந்த சீரை கொண்டு பாடல் இயற்றுவது சிறப்பாக இருக்காது என்பதால் அதிக அளவில் நான்கு சீர்களை கொண்ட பாடல்கள் இல்லை. இந்த நாலசைச்சீர் பற்றிய தகவல்களை கீழே காண்போம்.

சீர் விளக்கம் :-

 நான்கு அசைகளால் ஆகிய சீர் நாலசைச் சீராகும். எட்டு மூவசைச்சீர்களின் ஈற்றில் நேர் நிரை அசைகளை பெருக்க கிடைக்கும்  பதினாறு அசைகளும் நாலசைச்சீர்கள் எனப்படுகின்றன. 

அசைகளின் ஈற்றில் நேரசை கொண்டு முடியும் சீர்களுக்குப் பூச்சீர் என்றும், ஈற்றில் நிரையசை கொண்டு முடியும் சீர்களுக்கு நிழற்சீர் என்ற பெயர்களில் குறிப்பர்.

இவை தண்பூ, நறும்பூ, தண்ணிழல், நறும்நிழல்  ஆகிய நான்கு வாய்பாடுகளை பெற்றிருப்பதாக இருக்கின்றது.

இவற்றுள் முதல் நான்கு சீர்கள் தண்பூ என்ற வாய்பாடையும்,

அடுத்த நான்கு சீர்கள் நறும்பூ என்ற வாய்பாடையும்,

அடுத்த நான்கு சீர்கள் தண்ணிழல் என்ற வாய்பாடையும்,

கடைசி நான்கு சீர்கள் நறும்நிழல் என்ற வாய்பாடையும் பெற்று வருபவையாக உள்ளன. 

தண்பூ            =   4

நறும்பு            =  4

தண்ணிழல் =  4

நறும்நிழல்   =  4

                          - - - - 

                            16

                          - - - -

இந்த நாலசைச்சீரில் உள்ள பூச்சீர்கள் 8, நிழற்சீர்கள் 8 ஆக மொத்தம் 16 சீர்களை இந்ந நாலசைச்சீர்கள் பெற்றுள்ளன.

பூச்சீர் (8) :- 

தண்பூ (4) :-

    எட்டு வகையான மூவசைச்சீரிகளில் முதல் நான்கு சீர்களின் இறுதியில் நேர் என்னும் அசையை சேர்க்க கிடைக்கும் நான்கு சீர்கள் தண்பூ என்ற வாய்பாடை பெற்று வரும். அவை தேமா தண்பூ, புளிமா தண்பூ, கூவிளம் தண்பூ, கருவிளம் தண்பூ என்று பெயர் பெறும். 

நேர் + நேர் + நேர் + நேர் = தேமா தண்பூ

நிரை + நேர் + நேர் + நேர் = புளிமா தண்பூ

நேர் + நிரை + நேர் + நேர் = கூவிளம் தண்பூ

நிரை + நிரை + நேர் + நேர் = கருவிளம் தண்பூ



நறும்பூ (4) :- 

     எட்டு வகையான மூவசைச்சீரில் கடைசி நான்கு சீர்களின் இறுதியில் நேர் என்னும் அசையை சேர்க்க கிடைக்கும் நான்கு சீர்கள் நறும்பூ என்ற வாய்பாடை பெற்று வரும். அவை தேமா நறும்பூ, புளிமா நறும்பூ, கூவிளம் நறும்பூ, கருவிளம் நறும்பூ  என்று பெயர் பெறும். 

நேர் + நேர் + நிரை + நேர் = தேமா நறும்பூ

நிரை + நேர் + நிரை + நேர் = புளிமா நறும்பூ

நேர் + நிரை + நிரை + நேர் = கூவிளம் நறும்பூ

நிரை + நிரை + நிரை + நேர் = கருவிளம் நறும்பூ



நிழற்சீர் (8) :-

தண்ணிழல் (4) :-

 எட்டு வகையான மூவசைச்சீரிகளில் முதல் நான்கு சீர்களின் இறுதியில் நிரை என்னும் அசையை சேர்க்க கிடைக்கும் நான்கு சீர்கள் தண்ணிழல் என்ற வாய்பாடை பெற்று வரும்.  அவை தேமா தண்ணிழல், புளிமா தண்ணிழல், கூவிளம் தண்ணிழல், கருவிளம் தண்ணிழல் என்று பெயர் பெறும்.

நேர் + நேர் + நேர் + நிரை = தேமா தண்ணிழல்

நிரை + நேர் + நேர் + நிரை = புளிமா தண்ணிழல்

நேர் + நிரை + நேர் + நிரை = கூவிளம் தண்ணிழல்

நிரை + நிரை + நேர் + நிரை = கருவிளம் தண்ணிழல்



நறும்நிழல் (4) :-

எட்டு வகையான மூவசைச்சீரிகளில் கடைசி நான்கு சீர்களின் இறுதியில் நிரை என்னும் அசையை சேர்க்க கிடைக்கும் நான்கு சீர்கள் நறும்நிழல் என்ற வாய்பாடை பெற்று வரும். அவை தேமா நறும்நிழல், புளிமா நறும்நிழல், கூவிளம் நறும்நிழல், கருவிளம் நறும்நிழல் என்று பெயர் பெறும்.

நேர் + நேர் + நிரை + நிரை = தேமா நறும்நிழல் 

நிரை + நேர் + நிரை + நிரை = புளிமா நறும்நிழல் 

நேர் + நிரை + நிரை + நிரை = கூவிளம் நறும்நிழல் 

நிரை + நிரை + நிரை + நிரை = கருவிளம் நறும்நிழல்



இவையே நாலசைச்சீர்களாக இருக்கின்றன. இத்துடன் சீர் பற்றிய கருத்துகள் முடிவடைந்தன.  அடுத்த பதிவுகளில் இதனை தொடர்ந்துள்ள தளை பற்றி காண்போம்.

என்னுடைய பிறபதிவுகளை கீழே உள்ள தளத்திற்கு சென்று காணவும். 

இந்த பதிவை பற்றிய உங்களது செய்திகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இங்ஙனம் :-

 அ. அசார்தீன் (எம். ஏ., எம்ஃபில்.,) 

தமிழ்த்துறை உயராய்வு மையம், 

பழனி - 624601 

Thursday, 4 August 2022

யாப்பு : செய்யுள் உறுப்பு சீர் பகுதி - 2

 யாப்பு : செய்யுள் உறுப்பு சீர்

முந்தைய பதிவுகளில் கூறியது போன்று யாப்பிலக்கணம் என்பது எழுத்து, அசை, சீர், தளை,, தொடை, பா   போன்ற உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. அவற்றுள் எழுத்து மற்றும் அசை இவற்றை தொடர்ந்து சீர் என்ற உறுப்பினை பதிவு செய்து வருகிறேன். அவற்றுள் ஓரசைச்சீர் மற்றும் ஈரசைச்சீர் ஆகியவற்றை முந்தைய பதிவில் பகிர்ந்துள்ளேன். அத படித்துவிட்டு இந்த பதிவான மூவசைச்சீரை காணவும். இல்லையென்றால் எப்படி ஓரசை வந்தது, ஈரசை வந்தது என்ற ஐயப்பாடு மனதில் தோன்ற ஆரம்பித்துவிடும் அதனால் இதன் முதல் பகுதியை படிக்குமாறு கேட்டுக்கொண்டு பதிவை துவங்குகிறேன்.


யாப்பு : செய்யுள் உறுப்பு சீர்


மூவசைச்சீர் :-

     மூவசைச்சீர் என்பத சுருக்கமா விளக்கினாள் முதலில் பார்த்த ஈரசைச்சீரில் மீண்டும் நேர் அசையையும் நிரையசையையும் பெருக்கினால் கிடைக்க கூடிய 8 வகையான அசைகள் தான் மூவசைச்சீர்.


விளக்கம்  :-

       தேமா முதலிய ஈரசைச்சீர் நான்கோடு நேர், நிரை என்னும் அசைகளை பெருக்க உண்டாகும் எட்டுசீர்கள் மூவசைச்சீர் ஆகும். அவை காய்ச்சீர், கனிச்சீர் என இருவகைப்படும்.

காய்ச்சீர் :- (4)

    ஈரசைச்சீரகளோடு நேர் என்னும் அசையினைச் சேர்க்க அவை தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் எனும் வாய்பாடுகளைப் பெறும். இச்சீர்களின் ஈற்றில் காய் என்பது இடம்பெறுவதால் காய்ச்சீர் ஆயிற்று. நேர் என்பது ஈற்றசையாக முடிவதால் நேரீற்று மூவசைச்சீர் என ஆயிற்று, இவை வெண்பாவிற்கு உரிய சீர்கள் அதனால் வெண்பா உரிச்சீர் என ஆயிற்று என்பர்.

காய்ச்சீர் வாய்பாடு :-

  நேர் + நேர் + நேர்  = தேமாங்காய் 

 நிரை + நேர் + நேர் = புளிமாங்காய் 

 நேர் + நிரை + நேர் = கூவிளங்காய் 

 நிரை + நிரை + நேர் = கருவிளங்காய் 




சான்றுகள் :- 

சான்று - - - -- - பிரிப்பு - - - - - - மூவசைச்சீர் - - - வாய்பாடு


1. நீரின்று நீ + ரின் + றுநேர் + நேர் + நேர் = தேமாங்காய். 

2. அகழ்வாரைத் = அகழ் + வா + ரைத் = நிரை + நேர் + நேர் = புளிமாங்காய். 

3. சிற்றரசன் = சிற் + றர + சன் = நேர் + நிரை + நேர் = கூவிளங்காய். 

4. மடற்பனையும் = மடற் + பனை + யும் = நிரை + நிரை +நேர் = கருவிளங்காய். 





கனிச்சீர் :- (4)

   ஈரசைச்சீரகளோடு நிரை என்னும் அசையினைச் சேர்க்க அவை தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி எனும் வாய்பாடுகளைப் பெறும். இச்சீர்களின் ஈற்றில் கனி என முடிவதால் இவை கனிச்சீராயிற்று, இதில் நிரை என்பது ஈற்றசையாக முடிவதால் நிரையீற்று மூவசைச்சீர் ஆயிற்று. இவை வஞ்சிப்பாவிற்கு உரிய சீர் என்பதால் வஞ்சியுரிச்சீர் என ஆயிற்று என்பர்.


கனிச்சீர் வாய்பாடு :-

 1) நேர் + நேர் + நிரை = தேமாங்கனி

 2) நிரை +நேர் + நிரை = புளிமாங்கனி

 3) நேர் + நிரை + நிரை = கூவிளங்கனி

 4) நிரை + நிரை + நிரை = கருவிளங்கனி



சான்றுகள் :-

 சான்றுகள் - - அசை பிரிப்புகள் - - - கனிச்சீர் - வாய்பாடு 

1) தொல்காப்பியம் = தொல் + காப் + பியம் = நேர் + நேர் + நிரை = தேமாங்கனி

2) பரிசோதனை = பரி + சோ + தனை = நிரை + நேர் + நிரை = புளிமாங்கனி

3) தண்டளிர்பதம் = தண் + தளிர் + பதம் = நேர் + நிரை + நிரை = கூவிளங்கனி 

4) எடும் எடும் என = எடும் + எடும் + என = நிரை + நிரை + நிரை = கருவிளங்கனி 


நன்றி

அடுத்த பதிவில் இதனுடைய தொடர்ச்சியான நாலசைச்சீரை பற்றி காண்போம். உங்களத கருத்துகளை என்னுடன் பகிர்நது கொள்ளுங்கள். 


இங்ஙனம் :-

 அ. அசார்தீன் 

தமிழ்த்துறை உயராய்வு மையம்

 பழனி - 624601 


Monday, 1 August 2022

யாப்பு : செய்யுள் உறுப்பு சீர் - பகுதி 1

யாப்பிலக்கணம் - சீர்      

             யாப்பு என்ற இலக்கண கோட்பாடானது "எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா" போன்ற உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. அவற்றுள் எழுத்து மற்றும் அசை  ஆகிய இரண்டு உறுப்புகளை முந்தைய பதிவுகளில் பதிவு செய்துள்ளேன். முதலில் அவற்றை படித்துவிட்டு யாப்பின் அடுத்த உறுப்பாகிய "சீர் " என்ற உறுப்பை படித்தால் சீர் பற்றிய தகவல்களை புரிந்து கொள்ள ஏதுவாக அமையும். அதனால் எழுத்தையும், அசையையும் படித்துவிட்டு இதனை படியுங்கள். அவற்றை படிக்கும் வண்ணம் இணைப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

யாப்பு : உறுப்பு எழுத்து                                                                யாப்பு உறுப்பு அசை


யாப்பு - செய்யுள் உறுப்பு சீர்

            யாப்பின் உறுப்புகளான "எழுத்து மற்றும் அசையை" கூறும் முன் அதற்கு யாப்பிலக்கண அறிஞர்களின்  மேற்கோள்களை கூறித் தொடங்கினேன். அதாவது எழுத்தை குறித்து கூறும் போது "எழுதப்படுதலின் எழுத்து" என்றும் அசையை குறித்துக் கூறும் போது "அவ்வெழுத்து அசைத்து இசைகோடலின் அது அசை" என்றும் கூறி பதிவினை தொடங்கியிருப்பேன் அதே போன்று "சீர்" பற்றி இலக்கணிகள் கூறும் போது "அசையியைந்து சீர்கொள நிற்றலின் சீரே" என்று மேற்கோள் கொடுப்பர்.

            அதாவது, அசைகள் ஒன்றோ அல்லது பலவோ இணைந்து சீர் உருவாகும். அசைகள் ஓசை ஒழுங்கோடு கட்டப்பட்டு சீர் எனும் உறுப்பு உருவாகும் என்று இலக்கணிகள் குறிப்பிடுகின்றனர்.

   அசைகளால் கட்டப்படுவது சீர், அந்த சீரானது ஓசை ஒழுங்குடன் அமையப்படுவதாக இருக்கிறது.


சீர் பற்றிய கருத்துக்கள் :-

       நேர், நிரை என்னும் இருவகை அசைகளும் தனித்தோ, தொடர்ந்தோ அளவுற அமைவது சீர். இந்த சீர் இசைக்கு உதவுவதாக இருக்கின்றது. சீர் என்பதற்கு ஓசை என்று மற்றொரு பொருள் உண்டு. அசைகள் பொருந்தி ஓசை புலப்பட நிற்பதால் சீர் என்பது ஓர் காரணப் பெயராக இருக்கிறது.

                    சீர் என்பதை சொல் என்றும் வைக்கலாம் 

         ஒரு சீரில் (சொல்லில்) எத்தனை அசை இடம்பெற்றுள்ளதோ அதன் அடிப்படையில் சீர்கள் பெயர் பெறுகின்றன. அவை ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என்பனவாகும். நான்கிற்கு மேற்பட்டு தமிழ்மொழியில் சீர் பகுப்பு இல்லை.

சீர் கணக்கீடு

                             ஓரசைச்சீர்            -   2

                             ஈரசைச்சீர்             -   4

                             மூவைச்சீர்             -  8

                             நாலசைச்சீர்         -  16 


ஓரசைச்சீர்

        தமிழ் யாப்பிலக்கணத்தை பொருத்த வரை ஓரசைச்சீர் என்பது இரண்டு அவை, 

1. நேரசை 2. நிரையசை இவற்றை வைத்து உருவாகுபவையே மீதமுள்ள மூன்று அசைச்சீர்களுமாக உள்ளன. இந்த ஓரசைச்சீர் "அசைச்சீர்" என வழங்கப்படுகிறது.


ஈரசைச்சீர்

  • ஓரசைச் சீர்களை தொடர்ந்து வருபவை ஈரசைச்சீர்கள்.
  • நேர், நிரை என்னும் இவ்விரு அசைகளையும் பெருக்க நான்கு வகை ஈரசைச்சீர்கள் பிறக்கும் அவை " தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் எனும் நான்கு வாய்ப்பாடுகளைப் பெறும். இந்நான்கும் இயல்பாக அமைவன ஆதலால் இவை " இயற்சீர் " எனப்பெயர் பெற்றது. 
  • இந்த "ஈரசைச்சீர்கள்" "ஆசிரியப்பா" இயற்ற பயன்படுவன ஆதலால் இதை " ஆசிரிய உரிச்சீர்" என்பர்.
  • ஆசிரியப்பாவை "அகவற்பா'' என்னும் வேறு பெயராலும் வழங்குவர் ஆகையால் இது  "அகவல் உரிச்சீர்" என் ஆயிற்று. 
  • ஈற்றை அடிப்படையாகக் கொண்ட " தேமா, புளிமா" ஆகிய இரண்டும்      "மாச்சீர்"  எனப்பட்டன.
  • இந்த மாச்சீர்களை "நேரீற்று ஈரசைச்சீர்" எனவும் கூறுவர்.  
  • "கருவிளம், கூவிளம்" என்பன "விளச்சீர்" என குறிக்கப்படுகின்றன. இச்சீர்களை "நிரையீற்று ஈரசைச்சீர்" எனவும் அழைப்பர்.



சான்றுகள்:-

1) கோபால் = கோ / பால் =  நேர் - நேர்  =    தேமா
 
2) அரசன் =  அர / சன் =    நிரை - நேர்  =   புளிமா

3) மங்கலம்  = மங் / கலம் - நேர் - நிரை =   கூவிளம்

4) தவப்பயன்   =  தவப் / பயன் = நிரை - நேர்  =   கருவிளம் 





நன்றி

உங்களது பொன்னான கருத்துக்களை கமெண்ட்ல் பதிவிடவும். 

இங்ஙனம் :-

     அ. அசார்தீன் (எம். ஏ., எம் ஃபில்) 
     தமிழ்த்துறை உயராய்வு மையம், 
     பழனி - 624601 

நாட்டுப்புற நகைச்சுவை கன்னக்கோல் பாடல்

  கன்னம் வைத்துத் திருடுதல் அன்னம் வைத்த வீட்டில் கன்னம் வைக்கலாமா  என்பது தமிழ் பழமொழி. அதற்கேற்ப வகையில் அந்தக்காலத்தில் கன்னக்கோல் அல்...