Tuesday, 9 August 2022

யாப்பு செய்யுள் உறுப்பு தளை

 தளை

        இந்த யாப்பிலக்கணமானது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா போன்ற உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. அவற்றுள் எழுத்து, அசை, சீர் போன்ற மூன்றையும் அனைவருக்கும் புரியும் வண்ணம் முந்தைய பதிவுகளை பதிவு செய்துள்ளேன். இந்த பதிவில் யாப்பின் அடுத்த உறுப்பான தளை பற்றி காண்போம்.


தளை

        தளை எனும் உறுப்பை தொடங்கும் முன் இலக்கண விளக்கம் கொடுக்கும் மேற்கோளை காண்போம். தளை குறித்து இலக்கண நூலான இலக்கண விளக்கம் கூறும் போது சீரொடு சீர் தளைப்பெய்வது தளை என்று கூறும். தளை என்பதற்கு கட்டுதல் என்று பெயர். தளைதல் என்ற சொல்லில் உருவானது இத்தளை.

        சீர்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் போது நின்ற சீரின் ஈற்றசையும், வரும்சீரின் முதலசையும் ஒன்றுவதும், ஒன்றாததும் தளை ஆகிறது. இதை வடநூலார் பந்தம் என்பர்.


தளை விளக்கம் :-

        தளை என்னும் சொல்லுக்கு கட்டுதல் அல்லது பொருத்துவது என்பது பொருளாகும். கட்டுதளை தளைத்தல் என்றும் கூறுவர். "சீர்கள் ஒன்றை ஒன்று தொடரும் முறைக்கு" யாப்பு நூலார் தளை எனப் பெயரிட்டனர். இசை தொடர்ச்சி தோன்ற அமைக்கப்படுவதே  தளையின் பயனாகும்.  "நின்ற சீரின் ஈற்றசையும், வரும் சீரின் முதலசையும் ஒன்றியோ, ஒன்றாமலோ அமையுமானால் அது தளை என்று வழங்கப்படுகிறது. 


தளை கண்டறிவது எப்படி :- 

  தளை கண்டுபிடிப்பதற்கு முக்கியமான விஷயங்கள் சில உள்ளன. அவை

1.   சரியாக அசை பிரிக்க தெரிந்திருக்க வேண்டு்ம். 

2. பிரித்த அசைக்கான சரியான வாய்பாடு தெரிந்திருக்க வேண்டும். 

3. நின்ற சீர், வரும் சீர் என்பதை பற்றிய தெளிவு இருக்க வேண்டும். 

இந்த மூன்றும் சரியாக புரிந்தாலே போதும் தளையை கண்டறிவது சுலபமாக அமையும். 


சரி அது என்ன நின்ற சீர், வரும் சீர்? 

நின்ற சீர், வரும் சீர்  அப்படி என்றால் என்ன என்றால் உங்களுக்கு ஈசியா புரிஞ்சுக்க ஒரே வழி இது தான் ஒரு கூட்டல் குறி போடுங்க இந்த கூட்டல் குறிக்கு இடது பக்கம் இருப்பது நின்ற சீர், வலது பக்கம் இருப்பது வரும் சீர் புரிஞ்சது. புணர்ச்சி விதி மாதிரி தான் உதாரணமா கீழ இருக்க குறளை பாருங்களேன். 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது. 

இந்த குறளில முதல் இரண்டு சீரை எடுப்போம் அன்பும் அறனும் இத நான் சொன்னது மாதிரி கூட்டல் குறி வச்சு பாருங்க அன்பும் + அறனும் இதிலே கூட்டல் குறிக்க முன்னாடி இருக்க அன்பும் என்பது நின்ற சீர். கூட்டல் குறிக்கு பின்னாடி இருக்க அறனும் என்ற சொல் வரும் சீர் சரியா. எப்போதும் நிலையாக இருப்பது நின்ற சீர் அதை வந்து அடையும் சீர் வரும் சீர். இதை மனதில் தெளிவா பதிய வைங்க சரியா. சரி வாங்க தளைய பத்தி பாப்போம். 

இத்தளையானது இரண்டு வகைகளை கொண்டது 

1. ஒன்றிய தளைகள் (4)

2.  ஒன்றாத தளைகள் (3)


ஒன்றிய தளை விளக்கம் :

   நின்ற சீரின் ஈற்றசையும், வரும் சீரின் முதலசையும் ஒன்றாக அமைவது ஒன்றிய தளையாகும். ஒன்றிய தளைகள் 4 வகையாகும் அவை,

1. நேர் ஒன்றிய ஆசிரிய தளை

2. நிரை ஒன்றிய ஆசிரிய தளை

3. வெண்சீர் வெண்டளை

4. ஒன்றிய வஞ்சித்தளை 






நேர் ஒன்றிய ஆசிரியத் தளை :- 

        நின்ற சீரின் ஈற்றசையில்  தேமா,புளிமா ஆகிய   மாச்சீர்கள் வந்தும் , வரும் சீரின் முதலசையில்  நேரசை வருமானால் அது  நேர் ஒன்றிய ஆசிரியத் தளை என அழைக்கப்படும். இதனை மா முன் நேர்  என்று கூறுவர். 

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 


நிரை ஒன்றிய ஆசிரியத் தளை :- 

     நின்ற சீரின் ஈற்றசையில் கூவிளம், கருவிளம்  ஆகிய  விளச்சீர்கள் வந்தும், வரும் சீரின் முதலசையில்  நிரையசை  வருமானால் அது நிரை ஒன்றிய ஆசிரியத் தளை என அழைக்கப்படும்இதனை விளம் முன் நிரை என்று கூறுவர். 

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 

வெண்சீர் வெண்டளை :- 

        நின்ற சீரின் ஈற்றசையில்  தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் போன்ற  காய்ச்சீர்கள் வந்தும், வரும் சீரின் முதலசையில்  நேரசை வருமானால் அது  வெண்சீர் வெண்டளை என அழைக்கப்படும். . இதனை காய் முன் நேர் என்று கூறுவர்.

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 


ஒன்றிய வஞ்சித்தளை :- 

        நின்ற சீரின் ஈற்றசையில்  தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகிய  கனிச்சீர்கள் வந்தும், வரும் சீரின் முதலசையில்  நிரையசை வருமானால் அது  ஒன்றிய வஞ்சித்தளை என அழைக்கப்படும். இதனை கனி முன் நிரை என்று கூறுவர்.

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 


ஒன்றாத தளைகள் :- (3)

        நின்ற சீரின் ஈற்றசையும், வரும் சீரின் முதலசையும் ஒன்றாமல் அமைவது ஒன்றாத தளையாகும். ஒன்றாத தளைகள் 3 வகையாகும் அவை,

1. இயற்சீர் வெண்டளை

2. கலித்தளை

3. ஒன்றாத வஞ்சித்தளை




இயற்சீர் வெண்டளை :- (2)

        இயற்சீர் வெண்டளை மட்டும் இரண்டு விதமாக தளைக் கொள்ளும் அவற்றுள்,

    1. மா முன் நிரை 

    2. விளம் முன் நேர் 

1. மா முன் நேர் :- 

        மா முன் நிரை என்பது நின்ற சீரின் ஈற்றசையில் தேமா, புளிமா ஆகிய "மாச்சீரைப்" வந்தும் , வரும் சீரின் முதலசையில் "நிரையசை" வந்தும் 

2. விளம் முன் நேர் :-

        நின்ற சீரின் ஈற்றசையில் கூவிளம், கருவிளம்  ஆகிய "விளச்சீர்" வந்தும் , வரும் சீரின் முதலசையில் "நேரசை" பெற்றும் வந்தாலும்  அது இயற்சீர் வெண்டளை.

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 

கலித்தளை :-

        நின்ற சீரின் ஈற்றசையில்  தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் போன்ற  காய்ச்சீர்கள் வந்தும்வரும் சீரின் முதலசையில்  நிரையசை  வருமானால் அது  கலித்தளை என அழைக்கப்படும். . இதனை காய் முன் நிரை  என்று கூறுவர். 

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 

ஒன்றாத வஞ்சித்தளை :-

                    நின்ற சீரின் ஈற்றசையில்  தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகிய  கனிச்சீர்கள் வந்தும், வரும் சீரின் முதலசையில்  நேரசை வருமானால் அது  ஒன்றாத வஞ்சித்தளை என அழைக்கப்படும். இதனை கனி முன் நேர் என்று கூறுவர்.

(இதற்கான உதாரணம் நான் எழுதியவற்றை PDF வடிவில் கீழே கொடுத்துள்ளேன்.) 

நான்கு பாக்களுக்கான தளைகள் :-

வெண்பா :- 

            1. இயற்சீர் வெண்டளை,  2. வெண்சீர் வெண்டளை 

ஆசிரியப்பா :- 

            1. நேர் ஒன்றிய ஆசிரியத்தளை, 2. நிரை ஒன்றிய ஆசிரியத்தளை

கலிப்பா :-

            கலித்தளை 

வஞ்சிப்பா :- 

            1. ஒன்றிய வஞ்சித்தளை, 2. ஒன்றாத வஞ்சித்தளை 

        இவை தான் தளை குறித்த சிறப்பான விளக்கமாக அமைகிறது. இதை குறித்த உங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.  

       இந்த பகுதிக்கான உதாரணங்கள் குறித்த  PDF FILE ஐ கீழே பதிவுசெய்துள்ளேன் அதனை தரவிறக்கம் DOWNLOAD செய்து கொள்ளுங்கள். 

            ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் asardeen311@gmail.com என்ற  என்னுடைய மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். 

PDF DOWNLOAD HERE 📥

PDF FILE

நன்றி 

No comments:

Post a Comment

நாட்டுப்புற நகைச்சுவை கன்னக்கோல் பாடல்

  கன்னம் வைத்துத் திருடுதல் அன்னம் வைத்த வீட்டில் கன்னம் வைக்கலாமா  என்பது தமிழ் பழமொழி. அதற்கேற்ப வகையில் அந்தக்காலத்தில் கன்னக்கோல் அல்...