யாப்பு : செய்யுள் உறுப்பு சீர்
முந்தைய பதிவுகளில் கூறியது போன்று யாப்பிலக்கணம் என்பது எழுத்து, அசை, சீர், தளை,, தொடை, பா போன்ற உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. அவற்றுள் எழுத்து மற்றும் அசை இவற்றை தொடர்ந்து சீர் என்ற உறுப்பினை பதிவு செய்து வருகிறேன். அவற்றுள் ஓரசைச்சீர் மற்றும் ஈரசைச்சீர் ஆகியவற்றை முந்தைய பதிவில் பகிர்ந்துள்ளேன். அத படித்துவிட்டு இந்த பதிவான மூவசைச்சீரை காணவும். இல்லையென்றால் எப்படி ஓரசை வந்தது, ஈரசை வந்தது என்ற ஐயப்பாடு மனதில் தோன்ற ஆரம்பித்துவிடும் அதனால் இதன் முதல் பகுதியை படிக்குமாறு கேட்டுக்கொண்டு பதிவை துவங்குகிறேன்.
யாப்பு : செய்யுள் உறுப்பு சீர்
மூவசைச்சீர் :-
மூவசைச்சீர் என்பத சுருக்கமா விளக்கினாள் முதலில் பார்த்த ஈரசைச்சீரில் மீண்டும் நேர் அசையையும் நிரையசையையும் பெருக்கினால் கிடைக்க கூடிய 8 வகையான அசைகள் தான் மூவசைச்சீர்.
விளக்கம் :-
தேமா முதலிய ஈரசைச்சீர் நான்கோடு நேர், நிரை என்னும் அசைகளை பெருக்க உண்டாகும் எட்டுசீர்கள் மூவசைச்சீர் ஆகும். அவை காய்ச்சீர், கனிச்சீர் என இருவகைப்படும்.
காய்ச்சீர் :- (4)
ஈரசைச்சீரகளோடு நேர் என்னும் அசையினைச் சேர்க்க அவை தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் எனும் வாய்பாடுகளைப் பெறும். இச்சீர்களின் ஈற்றில் காய் என்பது இடம்பெறுவதால் காய்ச்சீர் ஆயிற்று. நேர் என்பது ஈற்றசையாக முடிவதால் நேரீற்று மூவசைச்சீர் என ஆயிற்று, இவை வெண்பாவிற்கு உரிய சீர்கள் அதனால் வெண்பா உரிச்சீர் என ஆயிற்று என்பர்.
காய்ச்சீர் வாய்பாடு :-
நேர் + நேர் + நேர் = தேமாங்காய்
நிரை + நேர் + நேர் = புளிமாங்காய்
நேர் + நிரை + நேர் = கூவிளங்காய்
நிரை + நிரை + நேர் = கருவிளங்காய்
சான்றுகள் :-
சான்று - - - -- - பிரிப்பு - - - - - - மூவசைச்சீர் - - - வாய்பாடு
1. நீரின்று = நீ + ரின் + று = நேர் + நேர் + நேர் = தேமாங்காய்.
2. அகழ்வாரைத் = அகழ் + வா + ரைத் = நிரை + நேர் + நேர் = புளிமாங்காய்.
3. சிற்றரசன் = சிற் + றர + சன் = நேர் + நிரை + நேர் = கூவிளங்காய்.
4. மடற்பனையும் = மடற் + பனை + யும் = நிரை + நிரை +நேர் = கருவிளங்காய்.
ஈரசைச்சீரகளோடு நிரை என்னும் அசையினைச் சேர்க்க அவை தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி எனும் வாய்பாடுகளைப் பெறும். இச்சீர்களின் ஈற்றில் கனி என முடிவதால் இவை கனிச்சீராயிற்று, இதில் நிரை என்பது ஈற்றசையாக முடிவதால் நிரையீற்று மூவசைச்சீர் ஆயிற்று. இவை வஞ்சிப்பாவிற்கு உரிய சீர் என்பதால் வஞ்சியுரிச்சீர் என ஆயிற்று என்பர்.
கனிச்சீர் வாய்பாடு :-
1) நேர் + நேர் + நிரை = தேமாங்கனி
2) நிரை +நேர் + நிரை = புளிமாங்கனி
3) நேர் + நிரை + நிரை = கூவிளங்கனி
4) நிரை + நிரை + நிரை = கருவிளங்கனி
சான்றுகள் :-
சான்றுகள் - - அசை பிரிப்புகள் - - - கனிச்சீர் - வாய்பாடு
1) தொல்காப்பியம் = தொல் + காப் + பியம் = நேர் + நேர் + நிரை = தேமாங்கனி
2) பரிசோதனை = பரி + சோ + தனை = நிரை + நேர் + நிரை = புளிமாங்கனி
3) தண்டளிர்பதம் = தண் + தளிர் + பதம் = நேர் + நிரை + நிரை = கூவிளங்கனி
4) எடும் எடும் என = எடும் + எடும் + என = நிரை + நிரை + நிரை = கருவிளங்கனி
நன்றி
அடுத்த பதிவில் இதனுடைய தொடர்ச்சியான நாலசைச்சீரை பற்றி காண்போம். உங்களத கருத்துகளை என்னுடன் பகிர்நது கொள்ளுங்கள்.
இங்ஙனம் :-
அ. அசார்தீன்
தமிழ்த்துறை உயராய்வு மையம்
பழனி - 624601
No comments:
Post a Comment