யாப்பு செய்யுள் உறுப்பு சீர்
நாலசைச்சீர்
முந்தைய பதிவுகளில் கூறியது போன்று யாப்பிலக்கணம் என்பது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. அவற்றுள் எழுத்து மற்றும் அசை ஆகிய இரண்டு உறுப்புகளையும் முழுவதும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக சீர் என்ற உறுப்பை கண்டுகொண்டிருக்கிறோம். அவற்றுள் ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர் ஆகிய மூன்று சீர்களையும் முந்தைய இரண்டு பகுதிகளில் பதிவு செய்துள்ளேன் அதை படித்து விட்டு நாலசை சீரை படிக்கவும். பகுதி 1 2 ற்கான Link கீழே உள்ளது. அதை படித்து விட்டு இந்த படிவை படிப்பது சிறப்பாக அமையும்.
நாலசைச்சீர்
நாலசைச்சீர் இது பொதுச்சீர் என பெயர் பெறும். இந்த சீரை கொண்டு பாடல் இயற்றுவது சிறப்பாக இருக்காது என்பதால் அதிக அளவில் நான்கு சீர்களை கொண்ட பாடல்கள் இல்லை. இந்த நாலசைச்சீர் பற்றிய தகவல்களை கீழே காண்போம்.
சீர் விளக்கம் :-
நான்கு அசைகளால் ஆகிய சீர் நாலசைச் சீராகும். எட்டு மூவசைச்சீர்களின் ஈற்றில் நேர் நிரை அசைகளை பெருக்க கிடைக்கும் பதினாறு அசைகளும் நாலசைச்சீர்கள் எனப்படுகின்றன.
அசைகளின் ஈற்றில் நேரசை கொண்டு முடியும் சீர்களுக்குப் பூச்சீர் என்றும், ஈற்றில் நிரையசை கொண்டு முடியும் சீர்களுக்கு நிழற்சீர் என்ற பெயர்களில் குறிப்பர்.
இவை தண்பூ, நறும்பூ, தண்ணிழல், நறும்நிழல் ஆகிய நான்கு வாய்பாடுகளை பெற்றிருப்பதாக இருக்கின்றது.
இவற்றுள் முதல் நான்கு சீர்கள் தண்பூ என்ற வாய்பாடையும்,
அடுத்த நான்கு சீர்கள் நறும்பூ என்ற வாய்பாடையும்,
அடுத்த நான்கு சீர்கள் தண்ணிழல் என்ற வாய்பாடையும்,
கடைசி நான்கு சீர்கள் நறும்நிழல் என்ற வாய்பாடையும் பெற்று வருபவையாக உள்ளன.
தண்பூ = 4
நறும்பு = 4
தண்ணிழல் = 4
நறும்நிழல் = 4
- - - -
16
- - - -
இந்த நாலசைச்சீரில் உள்ள பூச்சீர்கள் 8, நிழற்சீர்கள் 8 ஆக மொத்தம் 16 சீர்களை இந்ந நாலசைச்சீர்கள் பெற்றுள்ளன.
பூச்சீர் (8) :-
தண்பூ (4) :-
எட்டு வகையான மூவசைச்சீரிகளில் முதல் நான்கு சீர்களின் இறுதியில் நேர் என்னும் அசையை சேர்க்க கிடைக்கும் நான்கு சீர்கள் தண்பூ என்ற வாய்பாடை பெற்று வரும். அவை தேமா தண்பூ, புளிமா தண்பூ, கூவிளம் தண்பூ, கருவிளம் தண்பூ என்று பெயர் பெறும்.
நேர் + நேர் + நேர் + நேர் = தேமா தண்பூ
நிரை + நேர் + நேர் + நேர் = புளிமா தண்பூ
நேர் + நிரை + நேர் + நேர் = கூவிளம் தண்பூ
நிரை + நிரை + நேர் + நேர் = கருவிளம் தண்பூ
நறும்பூ (4) :-
எட்டு வகையான மூவசைச்சீரில் கடைசி நான்கு சீர்களின் இறுதியில் நேர் என்னும் அசையை சேர்க்க கிடைக்கும் நான்கு சீர்கள் நறும்பூ என்ற வாய்பாடை பெற்று வரும். அவை தேமா நறும்பூ, புளிமா நறும்பூ, கூவிளம் நறும்பூ, கருவிளம் நறும்பூ என்று பெயர் பெறும்.
நேர் + நேர் + நிரை + நேர் = தேமா நறும்பூ
நிரை + நேர் + நிரை + நேர் = புளிமா நறும்பூ
நேர் + நிரை + நிரை + நேர் = கூவிளம் நறும்பூ
நிரை + நிரை + நிரை + நேர் = கருவிளம் நறும்பூ
நிழற்சீர் (8) :-
தண்ணிழல் (4) :-
எட்டு வகையான மூவசைச்சீரிகளில் முதல் நான்கு சீர்களின் இறுதியில் நிரை என்னும் அசையை சேர்க்க கிடைக்கும் நான்கு சீர்கள் தண்ணிழல் என்ற வாய்பாடை பெற்று வரும். அவை தேமா தண்ணிழல், புளிமா தண்ணிழல், கூவிளம் தண்ணிழல், கருவிளம் தண்ணிழல் என்று பெயர் பெறும்.
நேர் + நேர் + நேர் + நிரை = தேமா தண்ணிழல்
நிரை + நேர் + நேர் + நிரை = புளிமா தண்ணிழல்
நேர் + நிரை + நேர் + நிரை = கூவிளம் தண்ணிழல்
நிரை + நிரை + நேர் + நிரை = கருவிளம் தண்ணிழல்
நறும்நிழல் (4) :-
எட்டு வகையான மூவசைச்சீரிகளில் கடைசி நான்கு சீர்களின் இறுதியில் நிரை என்னும் அசையை சேர்க்க கிடைக்கும் நான்கு சீர்கள் நறும்நிழல் என்ற வாய்பாடை பெற்று வரும். அவை தேமா நறும்நிழல், புளிமா நறும்நிழல், கூவிளம் நறும்நிழல், கருவிளம் நறும்நிழல் என்று பெயர் பெறும்.
நேர் + நேர் + நிரை + நிரை = தேமா நறும்நிழல்
நிரை + நேர் + நிரை + நிரை = புளிமா நறும்நிழல்
நேர் + நிரை + நிரை + நிரை = கூவிளம் நறும்நிழல்
நிரை + நிரை + நிரை + நிரை = கருவிளம் நறும்நிழல்
இவையே நாலசைச்சீர்களாக இருக்கின்றன. இத்துடன் சீர் பற்றிய கருத்துகள் முடிவடைந்தன. அடுத்த பதிவுகளில் இதனை தொடர்ந்துள்ள தளை பற்றி காண்போம்.
என்னுடைய பிறபதிவுகளை கீழே உள்ள தளத்திற்கு சென்று காணவும்.
இந்த பதிவை பற்றிய உங்களது செய்திகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்ஙனம் :-
அ. அசார்தீன் (எம். ஏ., எம்ஃபில்.,)
தமிழ்த்துறை உயராய்வு மையம்,
பழனி - 624601
No comments:
Post a Comment