யாப்பிலக்கணம் - சீர்
யாப்பு என்ற இலக்கண கோட்பாடானது "எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா" போன்ற உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. அவற்றுள் எழுத்து மற்றும் அசை ஆகிய இரண்டு உறுப்புகளை முந்தைய பதிவுகளில் பதிவு செய்துள்ளேன். முதலில் அவற்றை படித்துவிட்டு யாப்பின் அடுத்த உறுப்பாகிய "சீர் " என்ற உறுப்பை படித்தால் சீர் பற்றிய தகவல்களை புரிந்து கொள்ள ஏதுவாக அமையும். அதனால் எழுத்தையும், அசையையும் படித்துவிட்டு இதனை படியுங்கள். அவற்றை படிக்கும் வண்ணம் இணைப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
யாப்பு : உறுப்பு எழுத்து யாப்பு உறுப்பு அசை
யாப்பு - செய்யுள் உறுப்பு சீர்
யாப்பின் உறுப்புகளான "எழுத்து மற்றும் அசையை" கூறும் முன் அதற்கு யாப்பிலக்கண அறிஞர்களின் மேற்கோள்களை கூறித் தொடங்கினேன். அதாவது எழுத்தை குறித்து கூறும் போது "எழுதப்படுதலின் எழுத்து" என்றும் அசையை குறித்துக் கூறும் போது "அவ்வெழுத்து அசைத்து இசைகோடலின் அது அசை" என்றும் கூறி பதிவினை தொடங்கியிருப்பேன் அதே போன்று "சீர்" பற்றி இலக்கணிகள் கூறும் போது "அசையியைந்து சீர்கொள நிற்றலின் சீரே" என்று மேற்கோள் கொடுப்பர்.
அதாவது, அசைகள் ஒன்றோ அல்லது பலவோ இணைந்து சீர் உருவாகும். அசைகள் ஓசை ஒழுங்கோடு கட்டப்பட்டு சீர் எனும் உறுப்பு உருவாகும் என்று இலக்கணிகள் குறிப்பிடுகின்றனர்.
அசைகளால் கட்டப்படுவது சீர், அந்த சீரானது ஓசை ஒழுங்குடன் அமையப்படுவதாக இருக்கிறது.
சீர் பற்றிய கருத்துக்கள் :-
நேர், நிரை என்னும் இருவகை அசைகளும் தனித்தோ, தொடர்ந்தோ அளவுற அமைவது சீர். இந்த சீர் இசைக்கு உதவுவதாக இருக்கின்றது. சீர் என்பதற்கு ஓசை என்று மற்றொரு பொருள் உண்டு. அசைகள் பொருந்தி ஓசை புலப்பட நிற்பதால் சீர் என்பது ஓர் காரணப் பெயராக இருக்கிறது.
சீர் என்பதை சொல் என்றும் வைக்கலாம்
ஒரு சீரில் (சொல்லில்) எத்தனை அசை இடம்பெற்றுள்ளதோ அதன் அடிப்படையில் சீர்கள் பெயர் பெறுகின்றன. அவை ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என்பனவாகும். நான்கிற்கு மேற்பட்டு தமிழ்மொழியில் சீர் பகுப்பு இல்லை.
சீர் கணக்கீடு
ஓரசைச்சீர் - 2
ஈரசைச்சீர் - 4
மூவைச்சீர் - 8
நாலசைச்சீர் - 16
ஓரசைச்சீர்
தமிழ் யாப்பிலக்கணத்தை பொருத்த வரை ஓரசைச்சீர் என்பது இரண்டு அவை,
1. நேரசை 2. நிரையசை இவற்றை வைத்து உருவாகுபவையே மீதமுள்ள மூன்று அசைச்சீர்களுமாக உள்ளன. இந்த ஓரசைச்சீர் "அசைச்சீர்" என வழங்கப்படுகிறது.
ஈரசைச்சீர்
- ஓரசைச் சீர்களை தொடர்ந்து வருபவை ஈரசைச்சீர்கள்.
- நேர், நிரை என்னும் இவ்விரு அசைகளையும் பெருக்க நான்கு வகை ஈரசைச்சீர்கள் பிறக்கும் அவை " தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் எனும் நான்கு வாய்ப்பாடுகளைப் பெறும். இந்நான்கும் இயல்பாக அமைவன ஆதலால் இவை " இயற்சீர் " எனப்பெயர் பெற்றது.
- இந்த "ஈரசைச்சீர்கள்" "ஆசிரியப்பா" இயற்ற பயன்படுவன ஆதலால் இதை " ஆசிரிய உரிச்சீர்" என்பர்.
- ஆசிரியப்பாவை "அகவற்பா'' என்னும் வேறு பெயராலும் வழங்குவர் ஆகையால் இது "அகவல் உரிச்சீர்" என் ஆயிற்று.
- ஈற்றை அடிப்படையாகக் கொண்ட " தேமா, புளிமா" ஆகிய இரண்டும் "மாச்சீர்" எனப்பட்டன.
- இந்த மாச்சீர்களை "நேரீற்று ஈரசைச்சீர்" எனவும் கூறுவர்.
- "கருவிளம், கூவிளம்" என்பன "விளச்சீர்" என குறிக்கப்படுகின்றன. இச்சீர்களை "நிரையீற்று ஈரசைச்சீர்" எனவும் அழைப்பர்.
No comments:
Post a Comment