Tuesday, 17 December 2024

நாட்டுப்புற நகைச்சுவை கன்னக்கோல் பாடல்

 கன்னம் வைத்துத் திருடுதல்


அன்னம் வைத்த வீட்டில் கன்னம் வைக்கலாமா என்பது தமிழ் பழமொழி. அதற்கேற்ப வகையில் அந்தக்காலத்தில் கன்னக்கோல் அல்லது கன்னம் வைத்துத்திருடும் முறை என்பது  வழக்கத்தில் இருந்துவந்துள்ளது. அது என்ன கன்னக்கோல் வைத்துத்திருடுதல் என்று சற்றே குழப்பம் இருக்கலாம். 
அந்தக்காலத்தில் திருடர்கள் ஓரிருவாரம் ஒருவீட்டை நோட்டம் இட்டு அந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலோ அல்லது இரவு நேரங்களிலோ ஏதேனும் சிறியதாக ஒரு  பொருளைக்கொண்டு சிறிய சிறியதாக துளையிட்டு இறுதியாக பெரிய துளையாக்கி அவர்களது வீட்டு சூறையாடிச் செல்வது தான் கன்னக்கோல்.  
இந்த சம்பவங்கள் குறித்து நாட்டுப்புற கதைகள், கதைப்பாடல்கள் போன்ற பல சான்றுகள் இன்னும் இடம்பெற்றுள்ளன. அப்படி நாட்டுப்புற இலக்கியத்தில் இடம்பெற்ற நாட்டுப்புற நகைச்சுவைப் பாடல் தொகுப்பில் கன்னக்கோல் பாடல் என்பது இடம்பெற்றதாக இருக்கின்றது.  அது மிகவும் அழகானதாகவும் அதே சமயம் இந்தக்காலத்திலும் அதைப்போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதையும் கண்முன்னே காட்டுகிறது.  நாட்டுப்புற நகைச்சுவைப் பாடலை காண்போம். 

நாட்டுப்புற நகைச்சுவை கன்னக்கோல் பாடல் :-
இந்தக்காலத்தைப் போல் அந்தக்காலத்தில் மின்சாரவசதி என்பது சற்றும் கிடையாது அல்லவா. ஏசி, மின்விசிறி, என எதுவும் அந்தக்காலத்தில் கிடையாது அல்லவா அப்படி ஒருவீட்டில் மின்சாரம் சார்ந்த பொருட்கள் இருந்தால் அது மிகவும் அதிசயம் தான். அதே போல் தான் இரவு நேரத்தில் ஒருவீட்டினை  இரண்டு நபர்கள் கன்னக்கோல் வைப்பதற்காக வந்திருந்த சமயத்தில் வந்தவர்கள் வீட்டிற்குள் ஆள் இருப்பது தெரியாம அதே போல வீட்டுக்குள் இருப்பவருக்கும் வெளியே என்ன நடக்கிறது என தெரியாமலும் இருக்க உள்ளே இருந்த நபர் இரவு நேரத்தில் புழுக்கம் தாங்க முடியாததால பாட்டுப்பாடிட்டு தூங்கினா புழுக்கம் தெரியாதுனு பாட ஆரம்பிக்க அதே நேரம்  அந்த இருநபர்களும்  துளையிட ஆரம்பிக்கும் போது 

"சுண்ட எலி இரண்டும் பறிக்குதடி தன்னானே
மன்னனுக்கு பாட்டு வந்து வாச்சதடி தில்லேலே" 
னு பாட்டப்பாட ஆரம்பிக்கிறாரு. அதக்கேட்ட ரெண்டு பேரும் வெடவெடத்து உள்ள யாரோ இருக்காங்கடா எந்திரிடா எந்திரினு ரெண்டு பேரும் துளையிடறத நிறுத்திட்டு எந்திருச்சு நிற்கும் போது மீண்டும் அந்த வீட்டில் உள்ளிருந்த நபர்

"ரெட்டப் பனமரம் ரெண்டும் வந்து நிக்குதடி தன்னானே
மன்னனுக்கு பாட்டு வந்து வாச்சதடி தில்லேலே" 

னு அந்தப்பாட்டோட அடுத்த ரெண்டு வரிய பாடினாரு அத கேட்ட இரண்டு பேருக்கும் உயிரே இல்லாம நம்ம நிக்கறதும் தெரிஞ்சு போச்சுடா ஓடுடா ஓடு இல்லனா புடுச்சு அடி கொன்னுபோட்ருவாங்கனு நெனச்சு ரெண்டு பேரும் அந்த இடத்த விட்டு ஓட ஆரம்பிக்கறாங்க அப்போ அந்த வீட்டிலிருந்த நபர் மீண்டும்

"புள்ளிமானு ரெண்டும் துள்ளித்துள்ளி ஓடுதடி தன்னானே
மன்னனுக்கு பாட்டு வந்து வாச்சதடி தில்லேலே" 

னு அடுத்தவரிய பாட வந்த ரெண்டு பேரும் துண்ட காணோம் துணிய காணோம் னு ஓடினாங்களாம். காலைல எந்திருச்சு பாக்கறப்பதான் கன்னம் வைக்க வந்துருக்கறதே தெரிஞ்சுருக்காம். 
இதுதா நாட்டுப்புற நகைச்சுவைப்பாடல். 

குறிப்பு :- இந்தப் பாடலும் , நிகழ்வும் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் முதுகலை முதலாம் வருடம் படிக்கும
 போது எமது துறைத்தலைவர் முனைவர் நா. ஜோதீஸ்வரன் ஐயா அவர்கள் நாட்டுப்புறப்பாடல் எனும் தலைப்பில் நடத்தியது.

நன்றி

                   

இப்படிக்கு :-

அ. அசார்தீன் (எம். ஏ., எம் ஃபில்) 

தமிழ்த்துறை உயராய்வு மையம்

பழனி - 624601

 

Monday, 16 December 2024

நாட்டுப்புற நடவுப்பாடல்

 நடவுப்பாடல்


வேலமரப் பாதையிலே - வேலையா

வேலையில கண்ணிருக்கு - சுப்பையா 

வேலியோரம் போகுதுபார் - வேலையா 

வேட்டித்துணி போட்டிருக்கோ - சுப்பையா 

சித்தாடை கட்டிருக்கு - வேலையா

சின்னக்குட்டி போலிருக்கு - சுப்பையா 

கண்ணாடி தோற்குமடா - வேலையா

கண்ணைப் பறிக்குதோடா - சுப்பையா

கொண்டையில பூவிருக்கு - வேலையா

கொளச்சுமுடி போட்டிருப்பா - சுப்பையா 

காத்தேனவே பறந்துவாரா - வேலையா

கஞ்சிகொண்டு வாராளோடா - சுப்பையா

கதிரரிவாள் இருக்குதடா - வேலையா

கதிரறுக்கும் காலமல்ல - சுப்பையா 

ஆட்டுத்தழை அறுப்பாளாட - வேலையா

அண்டையில வந்துட்டாளோ - சுப்பையா

அன்னம் போல முன்னேவார - வேலையா

அவள் என் அத்தைமவ ரத்தினமட - சுப்பையா

அவள் உரிமையுள்ள புருசனும் நீ - வேலையா

அடுத்த மாசம் பரிசம் வைப்பேன் - சுப்பையா

                    இப்படிக்கு:-

அ. அசார்தீன்  (எம். ஏ., எம்ஃபில்)

தமிழ்த்துறை உயராய்வு மையம்

பழனி - 624601

நாட்டுப்புற நகைச்சுவை கன்னக்கோல் பாடல்

  கன்னம் வைத்துத் திருடுதல் அன்னம் வைத்த வீட்டில் கன்னம் வைக்கலாமா  என்பது தமிழ் பழமொழி. அதற்கேற்ப வகையில் அந்தக்காலத்தில் கன்னக்கோல் அல்...