Saturday, 31 December 2022

இடைநிலைகள்

 இடைநிலைகள் 




      இக்கட்டுரையில்  இடைநிலை என்பதைக் குறித்தும் அதனுடைய வகைகள் குறித்தும் விரிவாகக் காண்போம்

இடைநிலை விளக்கம் :

                பகுதிக்கும், விகுதிக்கும் இடைபட்டு நிற்கும் உறுப்பிற்கு இடைநிலை என்று பெயர். 


இடைநிலையின் வகைகள் :

            இடைநிலை 2 வகைப்படும் 

                                        (1)    பெயர் இடைநிலை 

                                        (2)    வினை இடைநிலை


 (1) பெயர் இடைநிலை :

    பெயர்ச்சொல்லின் பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் நிற்கும் உறுப்பிற்கு  "பெயர் இடைநிலை"  என்று பெயர்.

                வினையாலணையும் பெயர் மட்டும் வினையைச் சார்ந்து வருவதால் வினைக்குரிய இடைநிலையே அதற்கும் பொருந்தும்.


பெயர் இடைநிலைகள் :

                                 ஞ், ந், வ், ச், த், இச்சி ஆகிய ஆறும் பெயர் இடைநிலைகள்.

உறுப்புகள் எடுத்துகாட்டு
ஞ் அறிஞன்
ந் பொருநன்
வ் தலைவன்
ச் இடைச்சி
த் குறத்தி, உழத்தி
இச்சி தச்சிச்சி, ஆச்சி


(2) வினை இடைநிலைகள் :

                பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் வந்து மூன்று காலங்களையும் உணர்த்துவது வினை இடைநிலைகள். 
 அவை  "இறந்தகால இடைநிலை, நிகழ்கால இடைநிலை, எதிர்கால இடைநிலை"  என்று வகைப்படும்.

(i) இறந்தகால இடைநிலைகள்:

     த், ட், ற், இன் ஆகிய நான்கு உறுப்புகளும் இறந்தகால இடைநிலைக்குரிய உறுப்புகளாகும்.
உறுப்புகள் எடுத்துகாட்டுகள் பிரிப்பு
த் கொடுத்தான் கொடு + த் + த் + ஆன்
ட் கேட்டான் கேள் + ட் + ட் + ஆன்
ற் பெற்றான் பெறு + ற் + ஆன்
இன் சொன்னான் சொல் + இன் + ஆன்


           காலம் காட்டும் இடைநிலைகளையுடைய வினைச்சொல் முற்றாகவும், எச்சமாகவும் வரலாம் 

எடுத்துகாட்டு :
                                       போன = போ + இன் + அ  

(ii) நிகழ்கால இடைநிலைகள் :

                கிறு, கின்று, ஆநின்று ஆகிய மூன்று உறுப்புகளும் நிகழ்கால இடைநிலைக்குரிய உறுப்புகளாகும்.


உறுப்புகள் எடுத்துகாட்டுகள் பிரிப்பு
கிறு கொடுக்கிறான் கொடு + க் + கிறு + ஆன்
கின்று கொடுக்கின்றான் கொடு + க் + கின்று + ஆன்
ஆநின்று கொடாநின்றான் (கொடுக்காமல் நின்றான் என்று பொருள் படும்) கொடு + ஆநின்று + ஆன்


(iii) எதிர்கால இடைநிலைகள் :

                ப், வ் ஆகிய இரண்டு உறுப்புகளும் எதிர்காலம் காட்டும் இடைநிலைக்குரிய  உறுப்புகளாகும். 


உறுப்புகள் எடுத்துகாட்டுகள் பிரிப்பு
ப் கொடுப்பான் கொடு + ப் + ப் + ஆன்
வ் செய்வான் செய் + வ்+ ஆன்

இவையே இடைநிளைகளும், அதனுடைய வகைகளாகும். இதனை குறித்த உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி

அ. அசார்தீன் ( எம்.ஏ., எம்.ஃபில்)
தமிழ்த்துறை உயராய்வு மையம்,
பழனி - 624601 

Friday, 30 December 2022

விகுதிகள்

 விகுதிகள் :-



இந்த கட்டுரையில் விகுதிகளைக் குறித்து விளக்கமாக காண்போம்


      பகுபத்தின் இறுதி உறுப்பு "விகுதி" என அழைக்கப்படும். அவை 1. பெயர் விகுதி 2. வினைமுற்று விகுதி 3. எச்ச விகுதி என மூன்று வகைப்படும்.

       (i) பெயர் மற்றும் வினைமுற்று விகுதிகள் திணை, பால், எண், இடம் உணர்த்தும்.

        (ii) எச்ச விகுதி  திணை, பால், எண், இடம் போன்றவற்றை உணர்த்தாது.


1) பெயர் விகுதிகள் :-

(i) அன், ஆன் - குழையன், குழையான்

(ii) அள், ஆள் - குழையள், குழையாள்

(iii) அர், ஆர் - குழையர், குழையார்

(iv) து - குழையது

(v) அ, கள் - குழையன, பறவைகள்


2) வினைமுற்று விகுதிகள்

நன்னூல் குறிப்பிடும் வினைமுற்று விகுதிகள் மொத்தம் 37 அவை :-

வ.எண் பால்கள் விகுதிகள் எடுத்துக்காட்டுகள்
1 ஆண்பால் வினைமுற்று விகுதிகள் அன், ஆன் நடந்தனன்,நடந்தான்
2 பெண்பால் வினைமுற்று விகுதிகள் அள், ஆள் நடந்தாள், நடந்தனள்
3 பலர்பால் வினைமுற்று விகுதிகள் அர்,ஆர்,ப,மார் நடந்தனர், நடந்தார்
4 ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் து, று, டு நடந்தது
5 பலவின் பால் வினைமுற்று விகுதிகள் அ, ஆ நடந்தன
6 தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் கு, டு, து, று, என், ஏன், அன், அல் நடந்தனென், நடந்தென், நடந்தன்
7 தன்மை பன்மை வினைமுற்று விகுதிகள் கும், டும், தும், றும், அம், ஆம், எம், ஏம், ஒம் நடந்தோம்
8 முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் ஐ, ஆய், இ நடந்தாய், வந்ததை, வந்தவை
9 முன்னிலை பன்மை வினைமுற்று விகுதிகள் இர், ஈர், மின் நடந்தீர்
10 வியங்கோள் வினைமுற்று விகுதிகள் க, இய, இயர் வாழ்க, வாழிய, வாழியர்
11 செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று விகுதிகள் உம் நடக்கும்


இவற்றின் வரிசைகளை நன்னூல் 

        ''அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், 
        அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அன்,  
        அம், ஆம், எம்,ஏம், ஓம், உம், ஊர், 
        க ட த ற, ஐ, ஆய், இம். மின், இர், ஈர், 
         ஈயர், க, ய, உம் ''
என்று வரிசை படுத்தும்.

2.1  காலம் காட்டும் வினை முற்று விகுதிகள் :-


வ.எண் விகுதிகள் காலங்கள் எடுத்துகாட்டுகள்
1 று, றும் இறப்பு, எதிர்வு சென்று, சேரும்
2 து, தும் இறப்பு, எதிர்வு வந்து, வருதும்
3 டு, டும் இறப்பு உண்டு, உண்டும்
4 கு, கும் எதிர்வு உண்கு, உண்கும்
5 ஏவல், மின் எதிர்வு எழு, எழுமின்
6 க, இய, இயற் மூன்று காலங்கள் வாழ்க, வாழிய, வாழியர்
7 இ, மார் எதிர்வு வருதி, உண்மார்
8 இறப்பு, எதிர்வு உண்ப, என்ப(என்று சொன்னார்கள்)
9 உம் நிகழ்வு, எதிர்வு போகும், ஆகும்
10 ஆ (எதிர்மறைப் பொருளில்) முக்காலம் உண்ணா, வாரா

3) எச்ச விகுதிகள்

                    ஒரு சொல்லோ, அல்லது சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் இருப்பது எச்சம் என்று சொல்லப்படும். தொல்காப்பியம் இதனை " எஞ்சுபொருட்கிளவி'' என்று குறிப்பிடும்.  எச்சம் இரண்டு வகைப்படும் 
1. பெயரெச்சம்  2. வினையெச்சம் இவற்றுள், ஒரு எச்சச் சொல் பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம், வினையைக் கொண்டு முடிந்தால் வினையெச்சம்.
எடுத்துகாட்டு :-
 பெயரெச்சம் - நடந்த
 வினையெச்சம் - நடந்து, தேடி

எச்ச விகுதிகள் :

(i) பெயரெச்ச விகுதிகள் :
      அ, கும் - நடந்த , நடக்கும் (உம் - எதிர்காலம்)

(ii) வினையெச்ச விகுதிகள் :
      உ, இ - நடந்து, தேடி

இவையே விகுதிகள் குறித்த தகவல்கள் 

உங்கள் தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் தகவல்களை கீழே உள்ள கருத்துப் பெட்டி(Comment Box)யில் பதிவிடவும்.
நன்றி


தொடர்புக்கு :
அ. அசார்தீன் (எம்.ஏ., எம்.ஃபில்) 
தமிழ்த்துறை உயராய்வு மையம்,
பழனி - 624601

Thursday, 29 December 2022

ஓரெழுத்து ஒருமொழி

1.1 ஓரெழுத்து ஒருமொழி




      தமிழில் ஓரெழுத்து மட்டும் தனித்து நின்று பொருள் தரக்கூடிய சொல்லாகும் என்றால் அதற்கு ஓரெழுத்து ஒருமொழி என்று பெயர். ஓரெழுத்து ஒருமொழி மொத்தம் 42 அவை, 


"எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்" (நன்னூல்) 


உயிர் எழுத்தில் = 

ம் வரிசையில் = 6

த், ந், ந் வரிசையில் = 5*3= 15

க், வ், ச் வரிசையில் = 4*3 = 12

ய் வரிசையில் =

குறில் நொ, து =

மொத்தம் = 42 


உயிரெழுத்து - 6

ஆ - பசு

ஈ - சிறிய பறவை (House Fly) 

ஊ - தசை, இறைச்சி

ஏ - அம்பு

ஐ - தலைவன்

ஓ - மதகு நீர் தங்கக்கூடிய பலகை


ம் - வரிசை (6)


 மா - மாம்பழம், காய், பெரிய

மீ - மேல்

மூ - மூப்பு (முதுமை) 

மே - மேல்

மை - கண்மை (அஞ்சனம்) 

மோ - மோத்தல் (முகர்தல்) 



த் - வரிசை (5)

தா - கொடு

தீ - நெருப்பு

தூ - வலிமை

தே - தெய்வம்

தை - தமிழ் மாதம்


ப் - வரிசை (5)

பா - பாட்டு 

பூ - மலர்

பே - நுரை

பை - பொருட்களை இடப்பயன்படும் பொருள் (Bag) 

போ - செல்


ந் - வரிசை (5)

நா - நாக்கு

நீ - முன்னிலைப் பெயர்ச்சொல்

நே - அன்பு

நை - வருந்து

நோ - துன்பம் 


க் - வரிசை (4)

கா - சோலை

கூ - பூமி

கை - உறுப்பு

கோ - அரசன், பசு


வ் - வரிசை (4)

வா - அழைத்தல்

வீ - மலர்

வை - வைத்தல்

வௌ - வௌவுதல் (கவர்தல்)


ச் - வரிசை (4)

சா - சாதல்

சீ - வெறுப்பு, இகழ்ச்சிக் குறி

சே - எருது

சோ - மதில்

ய் - வரிசை (1)

யா - எவை

குறில் (நொ, து) (2)

நொ - வருந்து

து - உண் 


இவை 42ம் சிறப்பான ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள். இவை தவிர சிறப்பில்லாத ஓரெழுத்து ஒருமொழிச் சொற்களும் உண்டு அவை, 


1. பீ - மலம்

2. அ, இ, உ - சுட்டெழுத்துக்கள்

3. கு - பூமி

போன்றன. இவையே ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள். 


தொடர்புக்கு :- 

அ. அசார்தீன் (எம். ஏ., எம்ஃபில்)

தமிழ்த்துறை உயராய்வு மையம்.

பழனி - 624601

(cell : 7845461971) 

நாட்டுப்புற நகைச்சுவை கன்னக்கோல் பாடல்

  கன்னம் வைத்துத் திருடுதல் அன்னம் வைத்த வீட்டில் கன்னம் வைக்கலாமா  என்பது தமிழ் பழமொழி. அதற்கேற்ப வகையில் அந்தக்காலத்தில் கன்னக்கோல் அல்...